""ஊருக்குப் போகலாம் வாங்க...''

Wednesday, May 20, 2009

தேர்வுகள் முடிந்து மாணவர்கள் உற்சாக வெள்ளத்தில் இருக்கிற நேரம் இது. சில மாணவர்களுக்கு பெற்றோர்களிடமிருந்து மறுபடியும் நெருக்கடிச் சூழல் நேர்ந்திருக்கும். விடுமுறை வகுப்புகள் என்கிற தனிப்பயிற்சிகள். நடனம், கணினி, யோகா என்று நகரங்களின் தன்மைக்கேற்ப வகுப்புகளின் வகைகளும் மாறுபட்டிருக்கும்.
உண்மையில் விடுமுறையைக் கொண்டாடத் தெரியாதவர்களே இப்படியான வகுப்புகளுக்குள் திணித்துக் கொள்கிறார்கள். உலகம் ஊர் சுற்றுதலில் இருக்கிறது என்பதை அறியாதவர்கள். நகர வாழ்க்கைக்குத் தயாராகிறபோதே உறவுக் கண்ணிகள் அறுபட்டு தாங்கள் மட்டும்தான் இந்த உலகம் என்பதுபோல் தனிமைத் தீவுக்குள் குடும்பங்கள் நகரத் தொடங்கிவிட்டன.
இதனால் சகமனிதர்கள் மீதான அக்கறையின்மையும் சுயநலமும், விட்டுக்கொடுக்கும் தன்மையற்ற சூழலும் தனிமையின் நெருக்கடியும் பீடித்துக் கொள்ள மனச்சிக்கல்களுக்குள்ளான வாழ்க்கை முறைக்கு இந்தத் தலைமுறை குழந்தைகள் தள்ளப்படுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
உறவுமுறைகளைப் பற்றிய கவனமின்மையால் வளரும் சமூகம் பிற்காலத்தில் யாரிடம் எதைப் பகிர்ந்து கொள்வது என்ற தவிப்புக்குள்ளாகி தற்கொலை வரைகூட போய்விடுகின்றன.
முந்தைய தலைமுறையில் இருந்தவர்களுக்கு பொதுவாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் பல இருந்தன. மன இறுக்கம் தளர்ந்து நடைமுறை வாழ்க்கையை மகிழ்ச்சியாய் நடத்த ""ஊருக்குப் போவது'' என்பது மருந்தாய் இருந்தது.
"பலகாரம் கொண்டு போவது' குழந்தைகளுக்கு மொட்டையடிக்கப் போவது, திருவிழாக்களுக்குப் போவது என்று உறவுகள் கூடிப் பேச வாய்ப்பிருந்தது. அப்போது குழந்தைகளை அழைத்துச் செல்வது என்பது நல்ல பழக்கத்தில் ஒன்றாக இருந்தது. குழந்தைகளும் மாமா, பாட்டி, தாத்தா என்கிற உறவு முறைகள் பற்றி அறிந்து கொள்ளவும். அவர்களோடு ஓர் இணக்கத்தைத் தொடரவும் வாய்ப்பிருந்தது.
இப்போதிருக்கிற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்தவொரு விசேஷத்துக்கும் அழைத்துச் செல்வதில்லை. இதனால் சிறுசிறு உலக விவரங்களைக்கூட அவர்களால் அறிய முடிவதில்லை. எப்போதும் ஏட்டுப்படிப்பு ஒன்றே குழந்தைகளிடம் திணிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர் வீட்டு சிறப்பு நிகழ்வுகளுக்கு எதற்கும் அழைத்துச் செல்லப்படாத குழந்தைகளுக்கு நெருக்கமான உறவுமுறைகளைப் பற்றியோ, தங்கள் குடும்பத்தோடு நெருக்கமாக உள்ளவர்களைப் பற்றியோ அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.
முந்தைய காலங்களில் கிராமங்களில் ""ஊருக்குப் போதல்'' என்பது திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டமாக இருக்கும். ஒரு மாத கோடைவிடுமுறையில் அத்தை, மாமா, சித்தப்பா, பாட்டி வீடு என்று யாரேனும் ஒருவர் வீட்டுக்கு அல்லது எல்லா வீடுகளுக்கும் போய் வருவது என்பது பழக்கமாக இருந்தது. ஒவ்வோர் ஊரிலும் ஒரு வாரம் பத்துநாள் அந்தப் பகுதியில் இருக்கிற சுற்றுலாத்தலங்கள் யாவும் அத்துபடியாகிவிடும். ஊர் திரும்புகிறபோது உறவு வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அவரவர்கள் பங்குக்கு பணம் கொடுப்பதும், துணி எடுத்துக் கொடுப்பதும் முறைச் சடங்குகளில் ஒன்றுபோல கடைப்பிடிக்கப்படும். இன்றைய குழந்தைகளில் பலருக்கும் இந்த மகிழ்ச்சி கிட்டாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.
இன்றைய கோடை விடுமுறைக் கொண்டாட்டங்கள் மீறிப்போனால் குழந்தைகளுக்கு சம்பந்தமில்லாத கதைக் கருவுடன் கூடிய குழந்தைகள் திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பது மட்டும் என்கிற அளவிலும், ஒருநாளோ, இரண்டு நாளோ பெற்றோருடன் சுற்றுலா போவதுடன் சுருங்கிப் போய்விட்டது. மற்றவர்கள் மறுபடியும் ஏதாவது ஒரு கோடைக்காலப் பயிற்சி என்கிற செக்கு மாட்டு தளத்திற்குள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
""அறிவு வளரும்'' ""போட்டி உலகில் சமாளிக்க இம்மாதிரியான பயிற்சிகள் தேவை'' என்கிற போலி அறிவுஜீவி வாசகங்கள் சமாதானத்துக்குக் காத்திருக்கின்றன. உயர்கல்வியில் பள்ளியிலேயே எல்லாவகை கல்விக்கும் வாய்ப்பிருக்கும்போது விடுமுறையை விடுமுறையாகக் கழிக்கப் பழக்கப்படுத்தப்படாத குழந்தைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
பெற்றோர்கள் இந்த முறை தங்கள் குழந்தைகளை ஏதேனும் ஓர் ஊருக்கு அனுப்பி வைக்கலாம். ஏதேனும் ஓர் உறவுக்குழந்தையின் வருகைக்கு மனக்கதவைத் திறந்து வைக்கலாம்!
குழந்தைகளே... நீங்களும் கோடைப் பயிற்சிகளுக்கு விடை கொடுத்துவிட்டு உலகத்தைப் பயில ஊர்களுக்குச் சென்று வாருங்கள்!
ஊர்கள் என்பது வெறுமனே மக்களும் இருப்பிடமும் அல்ல! அவைகளே உண்மையான பள்ளிக்கூடங்கள்!

வளர்ச்சியும் பகிர்வு மேம்பாடும்

உலக வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டுக்கான "உலக முன்னேற்ற அறிக்கை' என் வாசிப்பிற்குக் கிடைத்தது. அந்த அறிக்கையின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. ""பொருளாதாரப் புவியியல் மறு உருவாக்கம்'' என்பதுதான் அந்த அறிக்கையின் தலைப்பு.

உலக வங்கியின் அந்த அறிக்கை ஒரு வித்தியாசமான செய்தியை நமக்குத் தருகிறது. அதாவது முன்னேற்றம் என்பது சுமுகமாக நடப்பது இல்லை. அது மிகப்பெரிய போராட்டத்தின் அடிப்படையில் வருவதாகும். பொருளாதார மேம்பாட்டுக்காக மக்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து இடம்விட்டு இடம் பெயர்ந்து கடின உழைப்பைத் தந்து செயல்படுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்தக் கடின உழைப்பு என்பது எல்லாப் பகுதிகளுக்கும் வருவது அல்ல. ஒரு சில இடங்கள் மட்டும் முன்னேற்றத் திட்டங்களைக் கவ்விப் பிடித்துக் கொள்கின்றன

நைஜீரியாவில் ஒன்பதாண்டு கல்வி பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் ஒருவன், நைஜீரியாவில் இருப்பவனைவிட எட்டுமடங்கு அதிகமாகச் சம்பாதிப்பான். எனவே உலகத்தில் நாம் எங்கே வாழ்கிறோம் என்பதில்தான் நம் வருமானம் அடங்கியுள்ளது. எனவே உலகத்தில் வருமானத்தை நிர்ணயம் செய்வது என்பது நமக்கு என்ன தகுதி, திறமை, யாரைத் தெரியும் என்பதைவிட எங்கு நாம் வேலை செய்கிறோம் என்பதில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது சமமாக இல்லை. பிராந்தியங்கள், பகுதிகள், நகரங்கள் என்று எவையெல்லாம் சந்தைக்கு அருகில் இருக்கின்றனவோ, பொருள் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு அருகில் உள்ளனவோ அவையெல்லாம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பொருளாதார நிலையில் அடைய முடிகிறது. மற்ற பகுதிகள் மற்றும் பிராந்தியங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிராகரித்தபொழுதும் அவர்களால் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை மாற்றியமைக்க முடியவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காணவும் முடியவில்லை.

உலகத்தில் ஒரு பக்கம் எல்லையில்லா வளர்ச்சி, மறுபக்கத்தில் வறுமை, கல்வியறிவின்மை, சுகாதாரக் கேடுடன் வாழும் மக்கள். இந்தச் சூழல் இன்றைய வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளில் பொருளாதாரச் செயல்பாடுகள் புவியியல் சார்ந்து வேற்றுமைகளை வருமானத்திலும், பொருள் உற்பத்தியிலும் கொண்டு வந்துவிட்டன. ஒரு தலைமுறை பொருளாதார மேம்பாட்டு ஆராய்ச்சியில் ஓர் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டது. அதாவது வளர்ந்த பொருளாதாரம் சுமுகமாக எல்லா இடங்களுக்கும் பரவிவிடும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.

பெருகிவரும் மக்கள்தொகை அடர்த்தியைக் குறைப்பதும் நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்வதைத் தடுப்பதும் அடைந்த பொருளாதாரத்தை சீரான அளவில் பங்கிட்டு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் தான் இன்றைய அரசாங்கத்தின் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் உலக வங்கி அலசி ஆராய்ந்து தனது அறிக்கையின் முடிவாக வெளிப்படுத்தியுள்ளது. இதுதான் உலக யதார்த்தமும்கூட.