வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்..
வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன.மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது. இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.
ஆழ்ந்த சுவாசம்: கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.
காட்சிப்படுத்துங்கள்: பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள். அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.புன்னகையின் சக்தி:மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.கடைவாய் – ஒரு ரகசியம்:மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.மனம் சொல்லும் மந்திரம்:நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.அடுத்தது என்ன…..? மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.எழுதிப்பாருங்கள்: மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.தடாலடிகளைத் தள்ளிப்போடுங்கள்: அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.காபி குடிப்பதைக் குறையுங்கள்:காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.நறுமணங்களின் நலம் பெறுங்கள்:தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்: டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.மூன்று முக்கிய இடங்கள்: பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்: கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.வைட்டமின் வேண்டும்: வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.அடையாளம் என்ன? மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.ஆகாயம் பாருங்கள்: அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.நடைப்பயிற்சி நலம் தரும்:நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.வெந்நீர்க்குளியல்: வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.இசையால் வசமாகும் இதயம்:எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.செல்லப் பிராணிகள்:நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.கவனம் குவியுங்கள்: மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.நண்பர்களை அழையுங்கள்:மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.வஜ்ராசனத்தின் வல்லமை:மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான். குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்)பிரார்த்தனை:மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.நிமிர்ந்து அமருங்கள்: சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.தாவரங்களோடு சிறிது நேரம்:பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.-மரபின்மைந்தன் ம. முத்தையா
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்
***இங்கே***
வெளிநாடு செல்லும் மோகம்! - சுஜாதா
Sunday, May 30, 2010
இனி, வெளிநாடு செல்லும் மோகம்.
பெரும்பாலும் இன்ஜினீயரிங் படிக்கும் நகர்ப்புற இளைஞர்களிடம் இந்த மோகம் தலைக்கிறுக்கி ஆடுகிறது (டாக்டர்களை அவர்கள் அதிகம் அனுமதிப்பதில்லை)
இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இளைஞர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.
பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-
1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.
அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.ஏன் போகலை?எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.
கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.
’அன்புடன்…’ வந்த கடிதங்கள்…
விகடனில் அன்புடன் பகுதியில் வெளி¢நாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நான் எழுதிய கடிதம் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறையப் பேர் போன் பண்ணிப் பாராட்டினார்கள். விவரமாகக் கடிதம் எழுதினார்கள். விகடன் அலுவலகத்தில் இன்னும் அதற்குக் கடிதங்கள் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்டர்நெட்டில் ஒரு பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.
இவ்வளவு சாதகபாதக விளைவுகளை ஏற்படுத்தியதென்றால் அதில் ஏதோ ஒரு உறுத்தும் உண்மை இருக்கவேண்டும் என்பது தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் நான் எழுதியதுடன் ஒத்துப்போயிருந்தார்கள். ஒரு சிலர் நான் இளைஞர்களை வெளி¢நாட்டுக்குப் போகாதீர்கள் என்று சொல்வதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு இந்த நாட்டில் என்ன இருக்கிறது என்றரீதியில் எழுதியிருந்தார்கள். ஒருவர் பூனாவில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. போல ஸீட் கொடுத்தால் ஐந்து வருஷம் நாட்டில் இருந்தாக வேண்டுமென்று கண்டிஷன் போட்டு பாஸ்போர்ட் கொடுக்காமல் அவர்களைக் கட்டிப்போட்டால்தான் நாடு உருப்படும் என்று எழுதியிருந்தார். ஜனநாயக நாட்டு நடைமுறைக்கு ஒவ்வாத யோசனை.
நான் அந்தக் கடிதத்தில் தீர்வும் சொல்லி இருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள் சிலர். என்னை நேரில் வந்து சந்தித்து,வெளி¢நாடு போகாமல் இங்கேயே சாதிப்பவர்களை எனக்கு அடையாளம் காட்ட ஆர்வமாக இருந்தார்கள்.
அந்தக் கடிதத்தின் இலக்கு இளைஞர்கள். அரசாங்கம் அல்ல. அரசாங்கத்துக்கு யோசனை சொல்லிக் கடிதம் எழுதுவதாயிருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
முக்கியமாக சிலர் உன் இரண்டு பிள்ளைகளுமே அமெரிக்காவில் வாசம் செய்கிறார்களே… உனக்கு என்ன தகுதியிருக்கிறது மற்றவருக்கு உபதேசம் செய்ய, புத்தி சொல்ல என்று கேட்டிருந்தார்கள். அவர்கள் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை. நான் போகாதே என்று சொல்லவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். செல்லுமுன் அதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலைகளை அறிந்து செல்லுங்கள் என்றுதான் எழுதியிருந்தேன். வெளிநாட்டில் போய் சம்பாதிப்பதைத் தவிர்க்க அல்ல. மேலும் என் பிள்ளைகள் இருவரும் அமெரிக்கா சென்று வேலைசெய்வதால்தான் என்னால் அந்தக் கட்டுரையை உண்மையாக எழுத முடிந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விளைவுகளை எல்லாம் சந்தித்தவன் என்கிற தகுதியில்தான் எழுதினேன்.

Subscribe to:
Posts (Atom)